20140306

மறைந்துவிட்ட மகேந்திர ஜாலக்காரன்


காட்சி 1

அதிகாலை நேரம்
இருள் விலகத்துவங்கியிருக்கிறது
திருநெல்லி மலைப்பகுதி
வயநாடு மாவட்டம்
கேரளம்
வளைந்து நெளிந்து கரடுமுரடான மலைப் பாதைகளுடன் மல்லுக்கட்டி, முகடுகளை நோக்கி இரைந்துசெல்லும் ஒரு வெள்ளை நிற அம்பாசடர் கார்.
அதில் ஐந்துபேர் நெரிசலாக அமர்ந்திருக்கிறார்கள்.
தோ பிகா ஜமீன், மதுமதி, ஆனந்த், செம்மீன் போன்ற இந்திய சினிமாவின் எக்காலத்திற்குமுறிய படங்களுக்கு அதிசய இசையமைத்த மாமேதை சலில் சௌதுரி, பல தேசிய விருதுகள் பெற்ற செம்மீன் திரைப்படத்தின் இயக்குநர் ராமு காரியாட், அவரது துணை இயக்குநர் கே ஜி ஜார்ஜ், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது பெற்ற எஸ் எல் புரம் சதானந்தன். இவர்களுடன் பெஞ்சமின் பாலநாதன் மகேந்திரா எனும் இளைஞன். வரும் காலத்தில் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளனாகப் போவதை கனவு கண்டோ என்னவோ அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார்! அந்த ஆழ்ந்த அதிகாலைத் தூக்கத்தை சலில் சௌதுரியின் குரல் கலைத்து விடுகிறது.
“ஆகா.. என்னவொரு அற்புதமான காட்சி! காலைச் சூரியன் பச்சை மலைகளுக்கு பின்னாலிருந்து அதோ எழுந்து வருகிறது. ஆழ்தடத் தாழ்வாரங்கள் ஒளிர்ந்து மின்னுகிறது.. பாலு.. இதை நீங்கள் இப்போதே படமெடுக்க வேண்டும். நாம் இன்றைக்கு படப்பிடிப்பு துவங்கப்போகும் நெல்லு படத்திற்காகவே“.

கார் நிறுத்தப்படுகிறது. பாலு மகேந்திரா வெளியே இறங்கி அக்காட்சியைப் பார்க்கிறார். தனது கேமராவை எடுத்து அதை படமாக்க ஆயத்தமாகிறார். இருள் விலகிவரும் அந்த தாழ்வாரங்களை விட, புல்நுனிகளிலிருந்து  உதிரும் பனித்துளிகளுக்குமேல் விழும் சூரிய ஒளியை படமாக்கத்தான் அவர் விரும்புகிறார். ஆனால் புல்களில்மேல் போதுமான அளவிற்கு பனித்துளிகள் இல்லை! ஒரு கணம் யோசித்த பாலு மகேந்திரா அனைவரையும் வரிசையாக நின்று புல்களின் மேல் சிறுநீர் கழிக்கச் சொல்கிறார்! அனைவரும் ஒத்துழைக்கிறார்கள்! சிறுநீர் துளிகளின்மேல் சூரியக் கதிர்கள் விழுந்து மஞ்சள் ஓளி பரப்புவதை பாலு மகேந்திராவின் கேமரா படமாக்குகிறது...

காட்சி 1/1

இரவு
திருவனந்தபுரம்
கேரளம்
1974ஆம் ஆண்டிற்கான மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா.
சிறந்த வண்ணத் திரைப்பட ஒளிப்பதிவாளனுக்கான விருது பெற்றுக்கொள்கிறார் பாலு மகேந்திரா. சிறுநீர்த்துளிகளை தனது கேமராவினால் பனித்துளிகளாக்கிய அந்த மகேந்திர ஜாலத்திற்காக...

காட்சி 2

அந்தி சாயும் நேரம்
1982 காலம்
சாகரா திரையரங்கம்
கட்டப்பன
கேரளம்
பதிமூன்று வயதான ஒரு சிறுவன், பாலு மகேந்திரா இயக்கிய ஓளங்ஙள் மலையாள திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான். திரையில் அழகான ஒரு ஆண்குழந்தை அசாத்தியமான முறையில் கால்பந்து விளையாடுகிறது. அக்குழந்தையின் மின்னல்வேகம் கொண்ட கால்களின் அசாத்தியமான காட்சிகள்... இருட்டில் தெரியும் ஒரு நீர்வீழ்ச்சி மெல்ல மெல்ல ஒளிமயமாகிறது! இருட்டை விலக்கி ஒரு புது பகல் பிறப்பதுபோல்! இளையராஜாவின் அற்புதப் பாடல்கள்.. அவற்றிற்கு பாலு மகேந்திரா அளித்த கனவு போன்ற காட்சிகள்... ஒரு காட்சி பாதியில் முறிந்துபோகிறது! ஆனால் அதில் பேசப்பட்டுகொண்டிருந்த வசனங்கள் அடுத்த காட்சிக்குமேல் அசரீரியாக தொடர்கிறது! இதெல்லாம் என்ன மாயவித்தை என்று வியந்துபோகிறான் அச்சிறுவன். அதுவரைக்கும் பிச்சாத்திக் குட்டப்பன், தெம்மாடி வேலப்பன், ரௌடி ராஜம்ம, பட்டாளம் ஜானகி, மனுஷ்ய மிருகம், இடிமுழக்கம் என மலையாள அடிதடிப் படங்களை மட்டுமே பார்த்து வந்த அவனது சினிமா ரசனையை பாலு மகேந்திராவின் ஓளங்ஙள் என்றைக்குமாக மாற்றியமைக்கிறது.

காட்சி 3

சென்னை மாநகரம்
காலம் 2004
முந்தைய காட்சியில் பார்த்த சிறுவன் இப்போது 34 வயது முதிர் இளைஞனாக காட்சியளிக்கிறான். இக்காலகட்டங்களுக்கிடையே அவர் நெல்லு, ப்ரயாணம், ராகம், சட்டக்காரி, சுவந்ந ஸந்த்யகள், சீனவல, உள்க்கடல் போன்ற மலையாளப் படங்களில் பாலு மகேந்திரா கையாண்ட இயல்பானதும் வித்தியாசமானதுமான ஒளிப்பதிவின் தீவிர ரசிகனாகியிருந்தார். பாலு மகேந்திரா முதன்முதலில் இயக்கிய திரைப்படமான கோகிலா (கன்னடம்), அதன் மலையாள வடிவம் ஊமக்குயில், அவர் இயக்கிய தெலுங்கு படமான நிரீக்‌ஷணா, அதன் மலையாள வடிவம் யாத்ரா, இந்திப்படமான ஸத்மா, அதன் தமிழ் வடிவம் மூன்றாம் பிறை போன்றவற்றை பார்த்திருந்தார் அவர். அழியாத கோலங்கள், மூடுபனி, நீங்கள் கேட்டவை, வீடு, சந்தியா ராகம், மறுபடியும், சதி லீலாவதி போன்ற பாலு மகேந்திராவின் தமிழ்ப் படங்களையும் அவர் ஆழ்ந்து ரசித்திருந்தார்.

இசைமேதை சலில் சௌதுரியின் அதிதீவிர ரசிகனான அந்த இளைஞன், பாலு மகேந்திராவுக்கும் சலில் சௌதுரிக்குமிடையே இருந்த ஆழ்ந்த உறவைப் பற்றி நன்கு அறிந்தவர். நெல்லு, ராகம் போன்ற படங்களினூடாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட புரிதலும் நட்பும் தான் கோகிலாவின், அழியாத கோலங்களின் அதிசய இசையாக வெளிப்பட்டது என்பது அந்த இளைஞனுக்கு தெரியும். 1995ல் மறைந்துபோன சலில் சௌதுரியின் நினைவிலான அற நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளராகயிருக்கிறார் அந்த இளைஞன் தற்போது. அவர் முகத்தில் ஒரு வகையான பதற்றத்தைக் காணலாம். ஏன் என்றால் அவர் தனது ஆதர்சங்களில் ஒருவரான பாலு மகேந்திராவிடம் முதன்முறையாக தொலைபேசியில் பேசப்போகிறார்.

பாலு மகேந்திராவுக்கு இப்போது 65 வயது. மூளையில் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, நிற்கவும் நடக்கவும் பேசவும் கூட சிரமப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறார். அந்த இளைஞனின் தொலைபேசி அழைப்பு வருகிறது. சலில் சௌதரியின் நினைவு நாளையொட்டி நடக்கப்போகும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான வேண்டுதல் தான் அது. சலில் சௌதுரியின் பேரைக் கேட்டதும் உற்சாகமடைகிறார் பாலு மகேந்திரா! “எனக்கு நிற்பதும் நடப்பதும் கூட கடினம். இருந்தும் சலில்தாவின் நினைவிற்காகத் தானே. அவசியம் வருகிறேன்என்று சொல்கிறார்.

காட்சி 4
     
2004 நவம்பர் 19
மாலை நேரம்
சென்னை மாநகரம்
ம்யூசிக அகாடமி அரங்கம்
மேடையில் பாலு மகேந்திரா, இளையராஜா, பத்மா சுப்ரமணியம், சலில் சௌதுரின் மனைவி சபிதா சௌதுரி. மேடைக்கு பின்னால் சலில் சௌதுரியின் மகன், மகள். அவர்களுடன் முன் காட்சிகளில் பார்த்த அந்த இளைஞன்.

உடல் நலக்குறைவினால் அமர்ந்துகொண்டே உறையாற்றுகிறார் பாலு மகேந்திரா.
கடந்த கால் நூற்றாண்டு காலமாக எனது படங்களின் இசையமைப்பு சார்ந்து நண்பர் இளையராஜாவுடன் அமர்ந்த ஒவ்வொரு முறையும் சலில் சௌதுரி பற்றியும் அவரது இசை வல்லமை பற்றியும் நாங்கள் மணிக்கணக்காக பேசாத நாட்களில்லை. சலில்தாவைப் போன்ற ஒரு இசை மேதையை, இனிமையான மனிதரை எனது வாழ்நாளில் நான் சந்தித்ததேயில்லை. அவர் போன்ற மாமேதைகள் ஒருபோதும் இறக்கப் போவதில்லைஎன்று கண்ணீர் துளிர்க்க தன் உரையை முடிக்கிறார் பாலு மகேந்திரா. தொடர்ந்து வரும் இசை நிகழ்ச்சியில் பாலு மகேந்திராவின் அழியாத கோலங்களுக்காக சலில்தா இசையமைத்த அழியாப் பாடல்கள் பாடப்படுகிறது...
...நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை.....

காட்சி 5

2006 காலம்
மதிய நேரம்
சென்னையில் ஒரு உணவு விடுதி
பாலு மகேந்திரா, எழுத்தாளர் ஜெயமோகன், முன் காட்சிகளில் பார்த்த அந்த இளைஞன்.
சில மணி நேரம் நீண்ட உரையாடல். இலக்கியம், இசை, சினிமா, தனது திரைப்படங்கள், தனது வாழ்க்கை, மனித உறவுகள், பெண்கள், காதல், காமம் என பரந்து ஒழுகிய பேச்சு அது.  தான் ஆரம்பிக்க விரும்பும் திரைப்படக் கல்லூரியைப் பற்றியான தனது கனவுகளை விரிவாக பேசுகிறார் பாலு மகேந்திரா. திரைப்படமாக்கத் தகுந்த சில கதைகளைப்பற்றி ஜெயமோகனிடம் விவாதிக்கிறார். சலில்தாவின் குழந்தைகள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்களா?என்று சலில் சௌதுரியின் குடும்பத்தினரை பற்றி அந்த இளைஞனிடம் நலம் விசாரிக்கிறார்.

காட்சி 6

ஒட்டிணைப்புக் காட்சிகள் (Montages)

சென்னை நகரில் நடக்கும் பல இலக்கிய, சினிமா நிகழ்வுகள்.
சிலவற்றில் மேடை விருந்தினர்களில் ஒருவராக அமர்ந்திருக்கிறார் பாலு மகேந்திரா. மேடைப் பேச்சுகளில் “எனக்கு இனி காலம் அதிகமில்லை. அதனால் நான் இதை இங்கு சொல்லித்தான் தீரவேண்டும்என்று சிலவற்றை தொடர்ந்து சொல்கிறார். பொதுவான உடல் நலக்குறைவும், சில நேரம் மன அழுத்தமும் அவரது உடல்மொழியிலும் வார்த்தைகளிலும் தென்படுகிறது. பல இலக்கிய நிகழ்ச்சிகளில் தனியனாக உள்ளே வந்து பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்துகொள்கிறார். ஆனால் அவரது நீண்டு மெலிந்த உருவமும், என்றும் இளமையான உடைகளும் எந்தவொரு கூட்டத்திற்கு நடுவேயும் அவரை தனித்து அடையாளம் காட்டுகின்றன! மங்கலான உரப்புப் பருத்தி கால்ச் சட்டையும் தொப்பியும், தடித்த பருத்திச் சட்டை.
சில நிகழ்வுகளில் முன் காட்சிகளில் பார்த்த இளைஞனும் இருக்கிறார். அவர் பாலு மகேந்திராவின் பக்கத்தில் அமர்ந்து பேசுகிறார். இசை, இலக்கியம், அன்றைக்கு நடக்கும் நிகழ்ச்சி என பலதரப்பட்ட விஷயங்கள். மலையாள சினிமாவின் சமகாலப் போக்குகள் பற்றி அந்த இளைஞனிடம் ஆர்வமாக கேட்கிறார் பாலு மகேந்திரா.


காட்சி 7

பகல்
காலம் 2013 செப்டம்பர்
சென்னை
பாலு மகேந்திரா சினிமாப் பட்டறை திரைப்படக் கல்லூரி.
முன் காட்சிகளில் பார்த்த அந்த முன்னாள் இளைஞன் இப்போது 44 வயதாகி தொப்பையும் தொந்தியுமாக நடந்துவருகிறார். 74 வயதான பாலு மகேந்திராவோ உடலில் தளதளப்பேதுமில்லாமல் கம்பீரமாக தனது அறைக்குள்ளே அமர்ந்திருக்கிறார். எப்போதும்போல தனித்துவமானது, இனிமையானது அவரது ஆங்கிலப் பேச்சு. அந்த முன்னாள் இளைஞனிடம் அவர் உரையாடுகிறார்.

முன்னாள் இளைஞன்: ஐயா.. தரமான மலையாள சினிமாவில் எனது ஆதர்ச இயக்குநரான கே ஜி ஜார்ஜைப் பற்றி சில நண்பர்கள் ஒரு ஆவணப் படமெடுக்கிறார்கள். அதில் அவரைப்பற்றி நீங்கள் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும் என்று உங்களிடம் வேண்டித்தான் வந்திருக்கிறேன். நீங்கள் பணியாற்றிய முதன்முதல் திரைப்படத்தின் துணை இயக்குநர் கே ஜி ஜார்ஜ். உங்களது நெருங்கிய நண்பர். பின்னர் அவர் இயக்கிய சில படங்களுக்கு நீங்கள் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறீர்கள். குறிப்பாக உள்க்கடல் என்ற படம். அப்படத்தின் கதாநாயகி உங்களது கண்டுபிடிப்பான சோபா. சோபாவுடன் உங்களுக்கு இருந்ததாக கூறப்பட்ட உறவையும், பின்னர் நிகழ்ந்த சோபாவின் தற்கொலையையும் கதைக்கருவாக்கி கே ஜி ஜார்ஜ் 1983ல் லேகயுடெ மரணம் ஒரு ஃப்லாஷ் பேக் என்ற திரைப்படம் இயக்கினார். அத்துடன் உங்களுக்கிடையேயான நட்பு உடைந்துபோனது. அல்லவா?

பாலு மகேந்திரா: ஆமாம். அப்போது அவன் மீது எனக்கு மிகுந்த வருத்தமும் கோபமும் இருந்தது. ஒரு நண்பனின் தனிமனிதத் துயரத்தை அவன் எப்படி வணிக நோக்கத்துடன் பொதுமக்கள் நுகர்வுக்கு வைக்கலாம் என்று யோசித்து ஆத்திரம் அடைந்திருக்கிறேன். ஆனால் இப்போது ஜார்ஜ் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு நேர்ந்த மூளை ரத்த அழுத்தத்தாலான பக்கவாதம் சமீபத்தில் அவனையும் கடுமையாக தாக்கியது என்று அறிந்து நான் மிகவும் சங்கடமடைந்தேன். ஜார்ஜ் ஒரு மகத்தான கலைஞன், மகத்தான இயக்குநர். அதில் எந்த சந்தேகமுமில்லை.
      
முன்னாள் இளைஞன்: லேகயுடெ மரணம் ஒரு ஃப்லாஷ் பேக்’  படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

பாலு மகேந்திரா: இல்லை. அதை பார்க்க நான் விரும்பவில்லை.

முன்னாள் இளைஞன்: ஐயா.. என்னோட திரை ரசனையின் படி லேகயுடெ மரணம் ஒரு ஃப்லாஷ் பேக்ஒரு மிகச் சிறந்த படம். அப்படத்தில் நீங்கள் என்று சொல்லப்படும் பாத்திரத்தை நடித்திருப்பவர் மலையாள சினிமாவின் ஆகச் சிறந்த நடிகரான பரத் கோபி. அப்பாத்திரம் மிக வலிமையாகவும் நுட்பமாகவும் எழுதப்பட்டு எடுக்கப்பட்ட ஒன்று. தவறான எந்த விஷயத்தையும் அப்பாத்திரம் செய்வதில்லை. படத்தில் அந்த நடிகைப் பாத்திரத்தின் குடும்பத்தினரும், துயரம் மிகுந்த அவளது பதின்பருவ அனுபவங்களும், மன அழுத்தங்களும் முதிற்சியின்மையும் தான் அந்த பரிதாபமான முடிவிற்கு காரணமாகிறது.

பாலு மகேந்திரா: அந்த நாட்களில் எவ்வளவு கற்கள் என்மேல் வீசப்பட்டன! சோபாவின் மரணத்திற்கு எவ்வகையிலும் நான் காரணமில்லை என்று எல்லா சட்ட விசாரணைகளிலும் நிரூபணமான பின்னரும், பாலு மகேந்திரா இலங்கைக்காரன், சட்ட விரோதமாக இங்கு தங்கியிருக்கிறான், அவனை இலங்கைக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்று என்மேல் வழக்குகள் தொடரப்பட்டன! அவ்வழக்குகள் எதுவுமே வெற்றிபெறவில்லை என்றாலும் அந்த ரணங்கள் என்னுள் ஒருபோதும் ஆறப்போவதில்லை. கே ஜி ஜார்ஜ் என்மேல் பெரும் கற்களை வீசவில்லை என்று இப்போது தெரிந்ததில் சிறு ஆசுவாசம்! 

முன்னாள் இளைஞன்: அப்படத்தின் சிறந்த பிரதி என்னிடம் இருக்கிறது. இப்போது இணையத்திலும் அப்படம் வந்துள்ளது. நீங்கள் அதை அவசியம் பார்க்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

பாலு மகேந்திரா: கொடுங்கள், பார்க்கிறேன். முடிந்தால் நெல்லு, உள்க்கடல் போன்ற எனது படங்களையும் கொடுங்கள். அவற்றையும் நான் முழுசாகப் பார்த்ததில்லை!

காட்சி 8

ஒரு முன் நிகழ்வு (Flash Back)
பகல்
கண்டி மாகாணம்
இலங்கை
க்வாய் நதிப் பாலம் (The Bridge on the River Kwai) எனும் ஆங்கில திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. சுற்றுலாவிற்கு வந்த பள்ளி மாணவர்களின் கூட்டம் ஒன்று அப்படப்பிடிப்பைப் பார்க்க அங்கு வந்து குவிகிறது. அவர்களுக்கிடையே 13 வயதான சிறுவன் பாலநாதன் மகேந்திரா. அத்திரைப்படத்தின் இயக்குநர் டேவிட் லீன் “மழை பெய்யட்டும்என்று மெகஃபோணில் ஆணையிடுகிறார். உடன் மழை பொழியத் துவங்குகிறது. பாலுவிற்கு அடங்காத ஆச்சரியம். இதுபோல் ஒருநாள் நான் சொன்னவுடனும் மழை பொழியப்போகிறது என்று அவன் உறுதிகொள்கிறான்.

குறிப்பு

பாலு சார் கேட்ட எல்லாத் திரைப்படங்களையும் எடுத்துக்கொண்டு ஒருநாள் அவரது திரைப்படக் கல்லூரிக்கு மீண்டும் சென்றேன். ஆனால் மீண்டும் ஒருமுறை அவரை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. திரைப் படங்களை அவரது உதவியாளரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். அப்படங்களை பாலு சார் பார்த்திருப்பாரா? தெரியவில்லை.

தனிப்பட்டமுறையில் நெருங்கிய உறவு எதுவும் எனக்கு பாலு சாருடன் இருந்ததில்லை. அவருடன் நின்று ஒரு புகைப்படத்தைக் கூட நான் எடுக்கவுமில்லை. ஆனால் 2014 பிப்ரவரி 13 அன்று, அவரது மரணம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அச்செய்தி அறியநேர்ந்து நான் கதறி அழுதேன். பாலு மகேந்திரா எனும் அற்புதக் கலைஞனுடன் எனக்கிருந்த உறவு அக்கண்ணீர் துளிகளைப்போன்றது. வார்த்தைகளால் விளக்க முடியாதது அது. அவரது உயிரற்ற உடலைப் பார்க்க நான் விரும்பவில்லை. அந்த இறுதிச் சடங்குகளுக்கு நான் போகவுமில்லை. பாலு மகேந்திரா எனும் மகா கலைஞன் இந்த எளிய ரசிகனின் இதயத்தில் என்றென்றும் உயிருடன் நீடித்திருப்பார்.


நன்றி - அந்திமழை மாத இதழ்
      

20131205

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நானும்
ஒரு ஊரில் ஒரு ஓநாய் இருந்ததாம்... அந்த ஓநாய்க்கு ஆட்டுக்குட்டிகளின் மாமிசம் ரொம்ப பிடிக்குமாம்... அதனால் அந்த ஓநாய் இறந்த ஒரு ஆட்டுக்குட்டியின் தோலை எடுத்து தன்மேல் போர்த்தி, மேய்ப்பன் இல்லாத நேரம் பார்த்து ஒரு ஆட்டு மந்தைக்குள்ளே புகுந்ததாம்... விபரம் புரியாத ஆட்டுக்குட்டிகளுக்கிடையே இணக்கமாக தங்கி அவற்றில் ஒவ்வொன்றையாக கொன்று தின்ன ஆரம்பித்ததாம்.... எங்கும் பாற்கடலென நிலவொளி பரவிக்கிடக்கும் ஓர் இரவில், பனி பெய்யும் மேகங்கள் தாழ்ந்திறங்கும் நேரத்தில் மேய்ப்பன் திரும்பி வந்தானாம். தனது ஆட்டுக்குட்டிகளின் எலும்புகளைப் பார்த்து கதறி அழுது, தான் பொறுப்பற்று விட்டுப் போனதாலேயே அந்த அப்பிராணிகள் உயிரிழந்தன என்று தவித்து, துயரமான ஒரு பாடலை பாடத்துவங்கினானாம். இரவின் ஆழ்ந்த நிசப்தத்தில் இடிமுழக்கம்போல் ஒலித்த அப்பாடலின் கனத்தில் பயந்து நடுங்கிய ஓநாய் அங்கிருந்து ஓடிப்போய் தலைமறைவுக்கு இடம் தேடியதாம்... இடமேதும் கிடைக்காமல் இறுதியில் அது மனிதனின் இதயத்தில் புகுந்து, அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டதாம்...

காலம்காலமாக இருக்கும் ஒரு நீதிக்கதைக்குமேல் நான் போர்த்திய ஒரு கட்டுக்கதை இது. ஆறுவயதான என் மகளுக்கு இதை நான் சொல்லும்போது அவளுக்கே நன்றாகத் தெரிகிறது இது ஓநாய் குறித்தோ ஆட்டுக்குட்டி குறித்தோ மேய்ப்பன் குறித்தோ உள்ள கதை அல்ல என்பது! ஓநாயும் ஆடுகளும் ஆட்டுமந்தையும் நிலவொளி பரவிய அந்த இரவும் நிஜமாக இருக்கக் கூடியவைதான் என்றாலும், அவற்றின் வழியாக சொல்லப்படும் கருத்து அது எதுவுமல்ல என்பது ஒரு குழந்தைக்கே எளிதில் தெரிவது. ஒரு ஓநாய் ஆட்டுத்தோல் போர்த்தி மாறுவேடம் போடுமா? மேய்ப்பன் ஏன் ஆடுகளை அப்படி விட்டுப் போனான்? ஆடுகள் கொலை செய்யப்பட்டதைக் கண்டு அவன் ஏன் பாட்டு பாடினான்? ஏன் அவனால் அந்த ஓநாயை பிடிக்க முடியவில்லை? ஒரு ஓநாய் மனிதனின் இதயத்தில் புகுவது எப்படி? என்றெல்லாம் ஒருபோதும் என் மகள் கேள்வி கேட்க மாட்டாள்.

மாயை அல்லது பொய்த்தோற்றத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையே நடக்கும் வினோதமான விளையாட்டுதான் தனக்கு பிடித்தமான திரை உத்தி என்று அகிரா குரொசாவா சொல்லியிருக்கிறார். தனது பல படங்கள் வழியாக அதை விளக்கியுமிருக்கிறார். அதீத யதார்த்தம் என்றோ மீ யதார்த்தம் என்றோ இந்த உத்தியை வகை வகுக்கலாம். இதில் கலைப்படங்கள், வணிகப்படங்கள் என்கிற பாகுபாடுகள் எதுவுமில்லை.

மேலோட்டமான காரண ஆய்வுகளுக்குப் பொருந்தாத, முரண்பாடாகத் தோன்றக்கூடிய உருவகங்களின் அணிவகுப்பு தான் அத்தகைய திரைப்படக் காட்சிகள். பாத்திரங்களின் மன ஓட்டங்களும் மனப் பிராந்திகளுமெல்லாம் அவற்றில் காட்சியாக்கமாக விரிகின்றன. படிமங்களாக, உவமைகளாக, குறியீடுகளாக கவிதையிலும் இலக்கியத்திலும் கையாளப்படும் இந்த உத்தியை, உலக சினிமாவின் சிறந்த ஆசான்களான பெர்க்மேன், புனுவேல் போன்ற பலர் எழுபதாண்டுகளுக்கு முன்பிருந்தே கையாண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் வணிக சினிமாவுக்குள் முதன்முதலாக ஆற்றலுடன் இதைச் சாத்தியப்படுத்திக் காட்டிய திரைப்படம் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.  

மனிதனின் ஆழ்மன உணர்வுகளை காட்சிப்படுத்துவதற்கே தொடர்ச்சியாக முயன்ற  பெர்க்மேன் ஓநாயின் மணிநேரம் (Hour of the Wolf) என்று ஒரு படமே எடுத்திருக்கிறார்! ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற தலைப்பிலேயே அது ஒரு யதார்த்தப் படமில்லை என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் மிஷ்கின். மிஷ்கினின் எந்தவொரு படத்தையுமே யதார்த்தப் படம் என்று சொல்ல முடியாது. யதார்த்தப் படங்கள் எடுப்பதில் அவருக்கு நாட்டமுமில்லை. யதார்த்தமும் நாடகப் பாணியும்  ஓங்கிய இசையும் நடன அமைப்பும் கூடியாட்டத் தன்மையும் இடை கலந்து வருபவை அவரது படங்கள். ஆனால் யதார்த்தப் படங்கள் என்று சொல்லப்படுபவையில் இங்கு பயன்படுத்தப்படும் யதார்த்தத்திற்கு முற்றிலும் புறம்பான ஷேக்ஸ்பியர் காலத்து நாடக உத்தியான மனக்குரல் (Mind voice) போன்றவற்றை மிஷ்கின் எப்போதுமே தவிற்கிரார்!

மிஷ்கின் குரொசாவாவின் அதி தீவிர ரசிகர். குரொசாவா பற்றி பேசுமிடத்தில் தன்னைப் பற்றி பேசுவதைக்கூட விரும்பாதவர். குரொசாவா, தர்காவ்ஸ்கி போன்றவர்களெல்லாம் மிக அரிதான ரத்தினக்கற்களைப் போன்றவர்கள் என்றும் அவர்களை ஒரளவுக்கு புரிவதற்கே நமக்கு இன்னும் பல பதிற்றாண்டுகள் தேவைப்படும் என்றும் சொல்பவர் அவர்! அவர்களின் தரத்திற்கு நம்மால் என்றைக்குமே படங்களை எடுக்க முடியாது என்பது மிஷ்கினின் கருத்து. அவரே ஒப்புக்கொள்வதுபோல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் குறைகளற்ற படம் அல்ல. ஆனால் உலக சினிமாவின் அற்புத இயக்குநர்கள் வெகுதூரம் நடந்து சென்ற பாதையின் துவக்கத்தில், முதல் அடி எடுத்து வைப்பதற்கான மிஷ்கினின் முயற்சிதான் இப்படம்.

முன்முடிவுகள் எதுவுமே இல்லாமல் திரைப்படங்களை பார்க்கும் எளிய மனம் கொண்ட பார்வையாளர்களையும் உண்மையான சிந்தனைத்திறன் கொண்டவர்களையும் ஒரேபோல் கவர்ந்தது ஓநாயும் ஆட்டுக்குட்டியும். உலகம் முழுவதுமிருந்து பலதரப்பினைச் சார்ந்தவர்கள்  ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் பதிவு செய்த கருத்துக்களும், தனிப்பட்ட முறையில் எனக்கு வந்த பல்லாயிரக்கணக்கான  மடல்களும் அழைப்புகளும் அதன் அழியா சாட்சியங்கள். குடும்பத்துடன் திரையரங்கில் வந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்த இயக்குநர் பாலா என்னிடம் சொன்னார் “மிஷ்கின் அசாத்தியமான இயக்குநர். அவர் போன்று இன்னொருவர் இங்கில்லை. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெரும் வரம் அவர் என்று!

கலைரீதியாக பெருமளவில் கொண்டாடப்பட்டு, ஏற்கத்தகுந்த வணிக வெற்றியையும் பெற்ற ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பணியாற்றிய தருணங்கள் ஒவ்வொன்றும் என்னை மேலும் பணிவான, சுயநலமும் தற்பெருமையும் அற்ற மனிதனாக மாற்றியவை! யதார்த்தம் என்று நினைக்கக் கூடிய சூழல்களுக்குமேல் கட்டப்பட்ட அதீத யதார்த்தம்தான் இப்படம் என்பது போலவே இதன் படப்பிடிப்புக்கு நடுவே நிகழ்ந்த பல சம்பவங்களும் மிகுந்த கற்பனைத் தன்மையுடன் தான் இருந்தன!  

காவல் துறையின் குற்ற விசாரணைப் பிரிவில் அதிகாரியாக வரும் எனது பாத்திரம், ஆணையரின் அலுவலகத்தில் அவரிடமும் அவரது நண்பரான மருத்துவரிடமும் வாதிடும் காட்சிதான் முதன்முதலில் படமாக்கப்பட்டது. ஒரு பக்கத்துக்குமேல் வரும் வசனத்தை மனப்பாடம் செய்து ஒரே எடுப்பில் பேசவேண்டும்! அத்துடன் உணர்ச்சிகள் திடமாகவும் வலுவாகவும் வெளிப்பட வேண்டும்! காட்சிகளை எப்போதுமே நீளமாக எடுக்கும் மிஷ்கினின் சிக்கலான காட்சியமைப்பு வேறு! ஒன்று சரி வரும்போது எனக்கு இன்னொன்று தவறிவிடும். திரையில் இப்போதிருக்கும் காட்சியை விட சிறப்பாக அமைந்த சில எடுப்புகள் இருந்தன! ஆனால் அவற்றின் கடைசிப் பகுதிகளில் எனது முன் அனுபவமின்மையால் தவறுகள் நடந்து விட்டன! 62ஆவது எடுப்பு தான் திரையில் இப்போது நீங்கள் பார்க்கும் அந்த காட்சி! அதைப் படமாக்கிய பின்னர் மிஷ்கின் என்னைக் கட்டியணைத்தார். அன்றைக்கு என்னால் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை. சிபிசிஐடி லால் ஆக நான் என்னை உணரத் துவங்கியிருந்தேன்!

அந்த நாட்களில் நான் பாடக நடிகர் சந்திரபாபுவின் பாடல்களை கேட்ட வண்ணமே இருந்தேன். எனது வீட்டிலும் வாகனத்திலும் எப்போதும் சந்திரபாபு பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தன. அப்பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்கும்போது அந்த மகா கலைஞனின் அலாதியான மேதமையும் அவரது துயரமான வாழ்க்கையும் என் மனதை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தன. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் கடைசிக் காட்சிகளில் வரும் அந்த கல்லறைத் தோட்டத்திற்குள்ளே படப்பிடிப்பிற்காக நுழையும்போது மிஷ்கின் என்னை ஒரு கல்லறையின் பக்கம் அழைத்து சென்றார். பதின்பருவத்தை எட்டிய அவரது மகளும் கூடவே இருந்தாள். மிஷ்கின் அக்கல்லறையத் தொட்டு முத்தமிட்டார். அப்போதுதான் நான் அதைக் கவனித்தேன். அது சந்திரபாபுவின் கல்லறை! அப்பா வணங்கும் ஒரு மாபெரும் கலைஞனின் கல்லறை இது. தொட்டுக் கும்பிட்டுக்கோஎன்று மகளையும் கும்பிட வைத்து என்னை அங்கே தனியாக விட்டுச் சென்றார் மிஷ்கின். என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஒரு மணிநேரத்துக்கும் மேல் சந்திரபாபுவைப் பற்றி யோசித்தபடியே கண்ணீருடன் நான் அங்கு நின்றுகொண்டிருந்தேன்.                  
அந்த கல்லறைத் தோட்டத்திற்குள் பல இரவுகளை நாங்கள் கழித்தோம். கல்லறைகளுக்குமேல் அமர்ந்து, அங்கேயே உண்டு, தாங்க முடியாத கொசுத்தொல்லைக்கு நடுவேயும் அவ்வப்போது எதாவது ஒரு கல்லைறைக்கு மேலே படுத்து கண்ணயர்ந்து...! இறந்து போனவர்கள் நம்மை எதுவும் செய்ய மாட்டார்கள். ஒரு இரவில் கல்லறைத் தோட்டத்திற்கு பின்னாலிருக்கும் புதர்கள் மண்டிய இடத்தில் மனிதர்களின் எலும்புகள் வீசப்பட்டிருப்பதைக் கண்டேன். புதிய புதைகுழிகள் தோண்டும்போது கிடைத்த பழைய மனிதற்களின் எலும்புகள்!

ஸ்ரீ நடிக்கும் கதாநாயகப் பாத்திரம், எனது உதவியாளனை அடித்து விழவைத்து எங்கள் துப்பாக்கிகளை பலவந்தமாக எடுத்து அங்கிருந்து தப்பிக்கும் காட்சி படமாக்கப்பட்ட இரவு மறக்க முடியாதது. முதலில் ஓநாயால் கட்டிப் போடப்பட்டிருக்கும் ஸ்ரீயை நான் கட்டறுத்து விடவேண்டும். அதற்கு சற்று முன்புதான் அங்கேயே கண்தெரியாத ஒரு பாத்திரத்தை நான் தெரியாமல் சுட்டுக் கொல்கிறேன். அந்த காட்சியின் உணர்வில் திளைத்து நிற்கிறார் மிஷ்கின்!

ஸ்ரீயின் கைக்கட்டை அறுக்க என்னிடம் கொடுத்த கத்திக்கு கூர்மையே இல்லை! காட்சி படமாக்க ஆரம்பித்துவிட்டார்கள்! பாலாஜி ரங்காவின் கேமரா என் பக்கம் வரும் முன் நான் ஒரு உதவி இயக்குநரிடமிருந்த தொட்டால் வெட்டும் ஒரு சிறிய வெட்டுச் சாதனத்தை வாங்கினேன். எடுப்பின்போது ஸ்ரீயின் கை அறுந்திடக்கூடாது என்ற கவனத்தில் எனது விரலை நான் மோசமாக அறுத்து விட்டேன். கொட்டிய ரத்தம் காட்சி எடுப்பை சிக்கலாக்கியது. படப்பிடிப்பு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அன்று எனக்குப் பிறந்த நாள்!

தனது பாத்திரத்திற்கு வலிமை சேர்க்க ஸ்ரீ எடுத்த முயற்சிகள் அலாதியானது. பெரும்பாலான நேரங்களில் சாப்பிடாமல், தண்ணீர் கூடக் குடிக்காமல் அப்பாத்திரத்தின் மனநிலையிலேயே வாழ்ந்துகொண்டிருந்தார். மிஷ்கின் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை கனக் கச்சிதமாக உள்வாங்கி நடிக்கும் ஆற்றலை எப்போதுமே வெளிப்படுத்தினார். அப்பாத்திரத்தின் முழுநிறைவுக்காக தனது உடலையும் மனதையும் மிகவும் வருத்தினார். ரயில் பாலத்திலிருந்து கயிற்றில் தொங்கி கீழிறங்கும் காட்சியில் கையில் அணிந்திருந்த உறை கிழிந்து அவரது உள்ளங்கையிலிருக்கும் தோல் உரிந்துபோனது. ஆரம்பக் காட்சிகளில் பலமுறை தன்னை விட இருமடங்கு எடை கொண்ட மிஷ்கினை தோளில் தூக்கியெடுத்து நடந்து படிக்கட்டுகள் ஏறினார்!

மிஷ்கினின் வலங்கையான இணை இயக்குநர் புவனேஷ் கண்தெரியாத இருபது பேரை அழைத்து வந்தார். அவர்கள் வரும்போது ஒரு மூலையில் அமர்ந்து அன்று அவர்கள் பாடி நடிக்க வேண்டிய பாடலின் வரிகளை எழுதிக்கொண்டிருந்தார் மிஷ்கின். அரைமணி நேரத்தில் மேற்கத்திய செவ்வியல் இசையமைப்பாளர் அண்டோனின் ட்வோர்ஷாக் அமைத்த ஸ்டபாட் மாடெர் எனும் இசையை மையமாக வைத்து போகும் பாதை தூரமில்லை, வாழும் வாழ்க்கை பாரமில்லைஎனும் பாடலை உருவாக்கினார். அது அந்த பார்வையற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கத் துவங்கினார். அவர்களில் யாருமே நன்றாகப் பாடக்கூடியவர்கள் அல்ல என்பதை உணர்ந்த பின்னரும் மிகுந்த பொறுமையுடனும் நேசத்துடனும் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார்.

அப்போது மிஷ்கினிடம் நான் பேட்ரிக் ரொசாரியோவைப் பற்றிச் சொன்னேன். அவரும் கண் பார்வையற்றவர். அக்கார்டியன் எனும் இசைக் கருவியை மிகச்சிறப்பாக இசைக்கக் கூடியவர். எனது இசையின் தனிமை புத்தக வெளியீட்டு விழாவில் ஆரம்ப இசை வழங்கியபோது மிஷ்கினும் அவரை பார்த்திருக்கிறார். உடனடியாக அவரை அழைத்து வரும்படி சொன்னார். அவர் வந்துசேரும் வரை காத்திருந்து அந்த கண்தெரியாதவர்களின் பாடலுக்கு அக்கார்டியன் வாசிப்பவராக அவரையும் நடிக்க வைத்து, அவரது இசையின் துணையுடன் அக்காட்சியை பதிவு செய்தார். பின்னர் குரல் பதிவின்போது பேட்ரிக்கை ஒலிப்பதிவு கூடத்திற்கு வரவழைத்து அப்பாடலின் அசல் வடிவத்தைப் பதிவு செய்தார். திரையில் தனது நடிப்பை ‘பார்ப்பதுமிகவும் சந்தோஷமாகயிருந்தது என்று பேட்ரிக் பின்னர் என்னிடம் சொன்னார்.

வடபழனியில் உள்ள ஒரு மாபெரும் அடுக்குமாடி அங்காடித் தொகுதியின் வாகனங்கள் நிறுத்தும் நாங்காவது அடித்தளத்தில்தான் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. அங்கு பதிவான அந்த சண்டைக் காட்சியின்போது மிஷ்கினின் கால்கள் பல இடத்தில் காயம்பட்டன. அக்கால்களை வைத்துக்கொண்டே அந்த பெண்மணியையும் குழந்தையையும் தோளில் தூக்கி ஓடிக்கொண்டேயிருந்தார்! படப்பிடிப்பின் கடைசி நாளில் மிஷ்கின் நடித்த ஓநாய் பாத்திரம் இறந்துவிழும் காட்சி படமாக்கப்படும்போது கார்த்தி எனும் குழந்தையாக நடித்த சைதுப் பாப்பா மயக்கமாகி விழுந்தாள். அந்த காட்சியின் உக்கிரம் அக்குழந்தையின் மனதை அவ்வளவு பாதித்திருந்தது. காவல் துறையினராக நடித்துக் கொண்டிருந்த சில நண்பர்களும் மயக்கம்போட்டு விழுந்தனர்!

ஒரு சாதாரண திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் வசதிகளோ பாதுகாப்புகளோ எதுவுமில்லாமல் எடுத்து முடிக்கப்பட்ட படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்! மிஷ்கின் பாயும் மின் ரயிலிலிருந்து கீழே குதிக்கும் காட்சி எடுக்கப்பட்டதும் மிகக்குறைவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான். அன்றும் தனது மகளுடன் படப்பிடிப்புக்கு வந்தார் மிஷ்கின். அக்காட்சிகளில் நான் இல்லாதபோதிலும் என்னையும் வரவழைத்தார். இன்றிரவு முழுவதும் என்னுடன் இருங்கள் என்றார். பாயும் ரயிலிலிருந்து குதித்து அவர் கீழே விழப்போகும் இடத்தில் தடுப்பு மெத்தைகள் போடப்பட்டிருந்தன. ஒத்திகைக்காக ரயில் ஓட்டப்பட்டபோதுதான் ரயிலின் அசுர வேகம் எனக்கு விளங்கியது. அந்த வேகத்தில் ரயிலிலிருந்து குதித்தால் தடுப்பு மெத்தைகளின்மேல் தான் அவர் விழுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

நாலாபக்கமும் துருத்தி நிற்கும் கனமான இரும்பு தூலங்களும் உத்தரங்களும்! அதைச்சுற்றி கடும் காரைச் சுவர்கள். ஒரு நொடியில் எதுவும் நடக்கக் கூடும். தனது கலையில் யார் அறிவுரைகளையுமே ஏற்றுக்கொள்ள மாட்டார் மிஷ்கின் என்பதை நன்கு தெரிந்திருந்தும்  பயிற்சி பெற்ற நகல் நடிகரை வைத்து எடுக்கலாமே என்று பலவீனமான குரலில் சொன்னேன். அதற்கு அவர் சிரித்தபடியே இதைச் சொல்லவா உங்களை வரச் சொன்னேன்? எனக்கு எதாவது நடந்தாலும் என் மகளுக்கு நீங்களெல்லாம் இருக்கிறீர்கள் என்ற மன நிம்மதிக்காகத் தானேஎன்று சொல்லி ரயிலேறினார். சில நொடிகளில் அதிவேகத்தில் பாயும் ரயிலிலிருந்து அவர் கீழே குதித்தார். எனது மனம் ஒருகணம் உறைந்துபோனது. மெத்தை மேல் விழுந்து எழுந்து நின்றார். ஆபத்தான குதிப்புகளை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார் மிஷ்கின். பெரும்பாலும் அவர் தடுப்பு மெத்தைகளின்மேல் விழுவதேயில்லை. இருந்தும் எழுந்து வந்துகொண்டேயிருக்கிறார்... அடுத்த குதிப்புக்கு ஆயத்தமாக... ஓநாய்க்களின் நிழல்படாத இதயத்துடன்.... 

20131203

தோற்கடிக்க முடியாதவன் - வில்லியம் ஹென்லீ

தோற்கடிக்க முடியாதவன்*
வில்லியம் ஹென்லீ
மொழி : ஆங்கிலம்
நாடு : இங்கிலாந்து
ஆண்டு : 1888
தமிழில் : ஷாஜி

சூழ்ந்திருக்கும் கோரமான இரவிலிருந்து
துருவத்திலிருந்து துருவம் வரைக்கும்
பாதாளமாக நெளியும் இருட்டிலிருந்து
நான் நன்றி சொல்கிறேன்
இருக்கும் அல்லது இல்லாமலிருக்கும் கடவுளுக்கு
தோற்கடிக்க முடியாத எனது ஆன்மாவிற்காக

விழவைக்கும் சூழ்நிலைகளின் இறுக்கமான பிடியில்
நான் துவண்டு சுருங்கவில்லை
கதறி அழவில்லை
தற்செயல் நிகழ்வுகளின் கடும் தடியடிகளால்
எனது தலை ரத்தத்தில் குளித்திருக்கிறது   
இருந்தும் அது குனியவேயில்லை

வெறுப்பும் கண்ணீரும் நிரம்பி வழியும் இவ்விடத்திற்கு அப்பால்
பீதியின் கருநிழல்கள் மட்டுமே காணக்கிடைக்கிறது
ஆனால் கடந்தோடும் ஆண்டுகளின் அச்சுறுத்தல்கள் ஒவ்வொன்றும்
பயம் அறியாதவனாகவே என்னைக் கண்டடையும்

வாசல் குறுகியதோ அகலமானதோ ஆகட்டும்
தண்டனைகளாலும் வதைகளாலும் அது என்னை வரவேற்கட்டும்
எதுவும் என்னை சிதறடிக்க முடியாது
ஏனெனில் நான் எனது விதியின் எஜமான்
எனது ஆன்மாவின் படைநாயகன்


*இயக்குநர் மிஷ்கினின் அலுவலக அறைக் கதவில் சிலகாலமாக இக்கவிதை ஒட்டப்பட்டிருப்பதை காண்கிறேன்


20131201

மனிதன் மனிதனிடம் - பாப் மார்லி


மனிதன் மனிதனிடம் (Man to Man / Who the Cap Fits)
எழுதி இசையமைத்து பாடியவர் : பாப் மார்லி (Bob Marley)
இசை வகைமை : ரேகே
நாடு : ஜமாய்க்கா
ஆண்டு : 1971

தமிழில் : ஷாஜி


மனிதன் மனிதனிடம் நீதியற்றே நடக்கிறான்
யாரை நம்புவதென்று குழந்தைகளே தடுமாறுகிறார்கள்
கடும் விரோதிகள் சிறந்த நண்பர்களாகலாம்
நெருங்கிய நண்பன் கொடூர எதிரியாகலாம்
தலைக்கேற்ற தொப்பிகள் தேடுபவர்கள்!

உன்னுடன் தின்று குடிப்பார்கள்
பின்னாலிருந்து உன்மேல் மூத்திரம் பெய்வார்கள்
உன் நண்பனுக்கு நன்கு தெரியும் உனது பலவீனங்கள்
உன்னை எளிதில் சேதப்படுத்த அவனால்தான் முடியும்
தலைக்கேற்ற தொப்பிகள் தேடுபவர்கள்!

சிலர் உன்னை வெறுத்துகொண்டேயிருப்பார்கள்
உன்னை நேசிப்பதாக நடித்தபடியே
உன்னை அழிக்க முயன்றபடியே
ஆனால் கடவுளுக்கு நன்றி
இதை விட மோசமானவற்றை நீ கடந்து வந்திருக்கிறாய்

பாசாங்குகாரர்களும் ஒட்டுயிர்களும்
உனது பங்கை கடித்து தின்பார்கள்
உனது இரவு திடீரென்று பகலானால்
ஒளியிடம் தேடி உனதரிகிலிருந்து பலர் ஓடுவதை காண்பாய்
தலைக்கேற்ற தொப்பிகள் தேடுபவர்கள்